Skip to main content

சிறுமியின் பார்வையைப் பறித்த அரசுப் பள்ளி ஆசிரியர்! 

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
The government school teacher arrested in salem

தலைவாசல் அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் அலட்சியமாக வீசிய பிரம்பு, சிறுமியின் மீது விழுந்ததில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள மும்முடி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளி. இவருடைய மகள் கங்கையம்மாள்(10). தலைவாசலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு டிச. 21ம் தேதி வழக்கம்போல் பாட வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. தலைமை ஆசிரியரும் வகுப்பு ஆசிரியருமான திருமுருகவேல் பாடம் நடத்தினார். அப்போது, பாடம் தொடர்பாக குழந்தைகளிடம் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். 

vck

சிறுமி கங்கையம்மாளின் அருகில் அமர்ந்திருந்த மாணவி சரியாகப் பதில் சொல்லவில்லை எனத் தெரிகிறது. அதனால் அந்தச் சிறுமியை அடிப்பதற்காக தலைமை ஆசிரியர் தன்னிடம் இருந்த பிரம்பை எடுத்து வீசியுள்ளார். அந்தப் பிரம்பு எதிர்பாராத விதமாக சிறுமி கங்கையம்மாள் மீது விழுந்தது. இதில் அந்தச் சிறுமியின் இடப்பக்க கண் மீது பட்டு காயம் ஏற்பட்டது. 

வலியால் துடித்த சிறுமியை மீட்ட ஆசிரியர்கள் உடனடியாக தலைவாசலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமிக்கு கண் பார்வை பறிபோய்விட்டது தெரிய வந்தது. மகளுக்கு ஏற்பட்ட நிலை கண்டு பெற்றோர் கலங்கித் தவித்தனர். இதுகுறித்து பெற்றோர் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன்பேரில், தலைமை ஆசிரியர் திருமுருகவேல் மீது காவல்துறையினர் கொடுங்காயம் விளைவித்தல், சாதி வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். ஆசிரியரின் அலட்சியத்தால் மாணவியின் பார்வை பறிபோன சம்பவம் தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்