திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இதனையடுத்து பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதோடு இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேர் மீது இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையே சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு பல்வீர் சிங்கின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வீர் சிங் மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மணிக்குமார், மனித உரிமைகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதன் ஒரு பகுதியாக விசாரணை கைதிகள் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் 5 வாரங்களுக்குள் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. ஜெயலட்சுமிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பல்வீர் சிங்குக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.