Skip to main content

முந்திரி காடுகளை ஒரே நேரத்தில் அழிக்க துடிக்கும் வனத்துறை! வறட்சி காலத்தில் அழிக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தெற்குபகுதியில் மேற்பனைக்காடு ஊராட்சியில் நெய்வத்தளி கிராம எல்லை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரிக்காடுகள் உள்ளது. அதேபோல கீரமங்கலம் மேற்குபகுதியில் சேந்தன்குடி கிராமத்தில் சுமார் 350 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரிக்காடுகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்டுசாயும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. இந்த முந்திரிக்காடுகளில் கொட்டைகள் சேகரித்துக் கொள்ள  ஒவ்வொரு ஆண்டும் பல லட்சங்களுக்கு தனியார் ஒப்பந்தக்காரர்கள் ஏலம் எடுத்து வருகின்றனர். இந்த காடுகளில் மான், மயில், முயல், போன்ற வன விளங்குகளும் பறவைகளும் ஏராளமாக உள்ளது. ஆனால் அவற்றிக்கு தண்ணீர் வசதி இல்லாமல் தண்ணீரைத் தேடிச் செல்லும் போது விபத்துகளில் சிக்கி பலியாகும் அவல நிலையும் உள்ளது.

 Forest Department to destroy cashew forest at once! Public protest against drought


இந்நிலையில் கஜா புயல் தாக்கியதால் பெரிய மரங்களின் கிளைகள் உடைந்தது. அந்த கிளைகளை வனத்துறை மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு அகற்றப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு முந்திரி கொட்டை காய்ப்பு குறைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதனால் புயலால் முந்திரி மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சுமார் 500 ஹெக்டேர் முந்திரிக்காடுகளையும் வெட்டி அழிக்க தனியார் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவும் இந்தநேரத்தில் மொத்த முந்திரி காடுகளையும் வெட்டி அழிக்கும் போது காடுகளில் உள்ள வனவிலங்குகள், பறவைகள் தங்குமிடமின்றி வெளியேற்றப்படுவதால் அவை வேட்டையாடப்பட்டு அழிக்கப்படும் அபாய நிலை உள்ளது.

 

 Forest Department to destroy cashew forest at once! Public protest against drought


மேலும் வறட்சி நேரத்தில் அழிக்கப்பட்டால் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கும் தண்ணீர் கிடைக்காமல் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. முந்திரிக்காடுகள் வெட்டி அழிக்கப்பட உள்ள தகவல் அறிந்து மேற்பனைக்காடு மற்றும் நெய்வத்தளி கிராம மக்கள் அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகளை சந்தித்து முந்திரிக்காடுகளை வெட்டி அழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனு கொடுத்ததுடன் விளக்கங்களம் அளித்துள்ளனர். 
 

அதிகாரிகளைச் சந்தித்த குழுவினர் கூறும் போது.. 

தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் முழுமையாக கீழே சென்று கொண்டிருக்கிறது. அதனால் குடிதண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ள நிலையில் விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வனத்துறை புயலில் பாதிக்கப்பட்ட மரங்கள் காய்க்கவில்லை என்று காரணம் சொல்லி ஒரே நேரத்தில் மொத்த முந்திரிக்காடுகளையும் அழித்தால் கடும் வெயில் தாக்கும் நிலை ஏற்படும். மேலும் மறுபடியும் புதிய கன்றுகளை நட்டு வளர்க்க தண்ணீர் இல்லை. அதற்கான பலகோடி ரூபாய் பணம் செலவிட்டு எங்கோ ஒரு இடத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி கொண்டு வந்து கன்றுகளை வளர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தான் தற்போது மொத்த காடுகளையும் அழிக்கும் முயற்சியை கைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்து மரக்கன்றுகளை நட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் இந்த ஆண்டு வறட்சி அதிகமாக உள்ளதால் இப்போது காடுகள் அழிப்பதை கைவிட வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதால் வன உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போகும் என்று கூறியிருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன் பிறகும் காடுகளை அழிக்க வந்தால் சுற்றுவட்டார கிராமங்களை கூட்டி முடிவு செய்து அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வோம் என்றனர்.

 Forest Department to destroy cashew forest at once! Public protest against drought


மேலும் சிலர் நம்மிடம்.. இது வனத்துறையினரின் சூழ்ச்சியாகக் கூட இருக்கலாம். அதாவது முந்திரிக்காடுகளை அழித்து விட்டு பிறகு தண்ணீர் பற்றாக்குறை வறட்சி என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி காற்றில் உள்ள ஈரத்தைக் கூட உறிஞ்சி எடுக்கும் தைல மரக்காடுகளை வளர்க்க திட்டமிட்டிருக்கலாம். அதாவது புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து வறட்சியாக இருப்பதற்கு வனத்துறை வளர்த்து வரும் தைல மரக்காடுகளே காரணம். அவற்றை மனச்சாட்சி உள்ள வனத்துறை அதிகாரிகளே ஒத்துக் கொண்டாலும் அரசு தைல மரங்களை வளர்க்கச் சொல்லும்போது அதிகாரிகள் நாங்கள் கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்கிறார்கள். 

அப்படித்தான் முந்திரியை அழித்து தைல மரக்காடுகளை வளர்த்து மேலும் வறட்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது என்றனர். காற்றில் உள்ள மாசுகளை கட்டுப்படுத்தவும் ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் எளிதில் கிடைக்கவும் மழை பெறவும் மரங்களை நடவேண்டும் என்று அரசாங்கம் விளப்பர பிரச்சாரங்கள் செய்தாலும் இன்றைய இளைஞர்கள் சொந்த முயற்சியில் செய்து வருகிறார்கள். ஆனால் வனத்துறை இருக்கும் வனத்தை அழித்து வனவிலங்குகளை வேட்டையாட நினைப்பதும் மேலும் வறட்சியை ஏற்படுத்துவதும் நல்லதல்ல.

 

 

 

 

சார்ந்த செய்திகள்