Skip to main content

‘வெளிநாட்டு வேலை...’ - அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
'Foreign work...' - Neighborhood Tamil welfare department alert

பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா. தாய்லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களைக் கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது.

அண்மைக்காலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும் டிஜிட்டல் சேவைகளை சந்தைபடுத்துகின்ற மேலாண்மை பணி என்றும் நமது இளைஞர்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இம்மாதிரியாக இளைஞர்களை கவர்ந்து அழைத்து செல்லும் முகவர்கள் துபாய், தாய்லாந்து. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இம்முகவர்கள் இளைஞர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பணிக்கென்று மிக எளிமையான நேர்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தேர்வு வைத்துத் தெரிவு செய்வதோடு அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளைச் சொல்லி இளைஞர்களை பணிக்குத் தேர்வு செய்கின்றனர்.

தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாகத் தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள தங்க முக்கோணம் (Golden Triangle) என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்றனர். தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா (Arrival visa) வேலைவாய்ப்பை அனுமதிக்காது. மேலும், அத்தகைய விசாவில் லாவோஸுக்கு வருபவர்களுக்கு லாவோஸ் நாட்டு அதிகாரிகள் வேலைக்கான அனுமதியை (Work Permit) வழங்குவதில்லை. சுற்றுலா விசா, சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதுபோன்ற மோசடி வலையில் நமது இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும். நிறுவனத்தைப் பற்றி நன்றாக விசாரித்து பணிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேலைக்கான விசாவின் உண்மைத்தன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் (Work Permit) குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரியச் செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும். லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் cons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in. மற்றும் visa.phnompehh@mea.gov.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி இந்தியாவிற்குள் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், அயல்நாடுகளிலிருந்து தொடர்பு கொள்பவர்கள் 8069009901 என்ற எண்ணிலும், மிஸ்டு கால் கொடுப்பவர்கள் 8069009900 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.

மேலும் சென்னையில் உள்ள குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலரின் (Protector of Emigrants. Chennai) உதவி எண் - 90421 49222 ஐ தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் மத்திய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் மற்றும் முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரும் தீர்மானம் நிறைவேற்றம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Implementation of the decision to conduct a caste-wise census

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அச்சமயத்தில் சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.

எனவே 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்களான வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

Next Story

சாதிவாரி கணக்கெடுப்பு - இன்று தனித் தீர்மானம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Caste wise census - separate decision today

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நேற்று முன்தினம் (24.06.2024) சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்குப் பிறகுதான் இதை அமல்படுத்த முடியும் ஏற்கெனவே, பீகார் மாநிலத்திலே இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

Caste wise census - separate decision today

ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டுமெனப் பேசினார். அதற்கு அமைச்சர்கள் உரிய விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே. மணி ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு செய்தது. மேலும் இது தொடர்பாகச் சட்டப்பேரவை வளாகத்தில் பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிலுவையில் உள்ள வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதித்தோம். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு படி தான் உள் ஒதுக்கீடு வழங்குவோம் எனத் தமிழ்நாடு அரசு கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சனை. ஏற்கெனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்குத் தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Caste wise census - separate decision today

இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று (26.06.2024) தனித் தீர்மானத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பைச் சேர்த்து நடத்த வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.