Skip to main content

லஞ்சம் வாங்கி போலீஸிடம் சிக்கிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்!!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Food security officer arrested for bribery

 

தேனியில் மீன் கடை உரிமையாளரிடம் 10,000 லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி நகராட்சி அலுவலகம் அருகில் திருமலை பால்பாண்டி என்பவர் கடல் மீன்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த மாதம் 30ஆம் தேதி தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மீன்களில் ரசாயனம் கலந்து உள்ளதாகவும் அது குறித்து அபராதம் விதிக்க போவதாகவும் அவர் கூறினார். பின்னர் அவர் திருமலை பால்பாண்டியை தொடர்புகொண்டு அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டும் என்றால் 15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.

 

அதற்கு திருமலை பால்பாண்டி தனது கடையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் அவ்வளவு தொகையை லஞ்சமாக கொடுக்க முடியாது என்றும் கூறினார். அப்போது பேரம் பேசிய சண்முகம் 10,000 லஞ்சம் கொடுக்குமாறு கூறினார். அதைத் தொடர்ந்து திருமலை பால்பாண்டி பணம் கொடுப்பதாக தெரிவித்துவிட்டு தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்தார். அப்போது அவரிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட 10 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். இந்நிலையில் பழைய பஸ் நிலையத்திலுள்ள தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு பால்பாண்டி சென்றார். அங்கு அவர் பத்தாயிரத்தை உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகத்திடம் கொடுத்தார்.

 

Food security officer arrested for bribery

 

அப்போது அங்கு பதுங்கியிருந்த தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா, இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென அங்கு நுழைந்தனர். பின்னர் போலீசார் லஞ்சம் வாங்கிய சண்முகத்தைகையும் கைகளவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அதில் இருந்த ஆவணங்கள் குறித்து போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரான ராகவனை லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட சண்முகத்தை போலீசார் ஜீப்பில் ஏற்றி தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்