Skip to main content

பிரபல ஜூஸ் கடை சீல்; 6 உணவகங்களுக்கு அபராதம் - அதிகாரிகள் அதிரடி

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Food safety officer seal juice shop in Trichy

 

திருச்சி சாஸ்திரி ரோடு மற்றும் தில்லைநகர் பகுதியைச் சுற்றியுள்ள ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் சுமார் 21 கடைகள் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ், செல்வராஜ், வசந்தன், இப்ராஹிம், ரெங்கநாதன், ஜஸ்டின், வடிவேல் மற்றும் அன்புச்செல்வன் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்டது.    

 

ஆய்வு செய்ததில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி, சமைத்த அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் சுமார் 140 கிலோ வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், ஒன்பது கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில் 6 கடைகளுக்கு தலா ரூ.3000 வீதம் 18,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.     

 

Food safety officer seal juice shop in Trichy

 

இதையடுத்து, ஆய்வின்போது அங்கிருந்த பிரபல ஜூஸ் கடை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஜூஸ் போட வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்தனர். ஆனால் ஏற்கனவே இதுபோன்று கண்டறியப்பட்டு அபராத தொகை போடப்பட்டிருந்ததால் தொடர் குற்றத்தின் அடிப்படையில் அந்த கடை சீல் செய்யப்பட்டது.

 

மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றைய தினம் மீதமாகும் கோழி இறைச்சியைக் கண்டிப்பாகக் கோழி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதனப் பெட்டியில் கோழி இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவுப் பொருளோ கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்