Skip to main content

தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் செயலால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

Farmer passed away people road blocked

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர், விவசாய வேலைகளுக்காக ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று டிராக்டர் ஒன்றை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த கடனுக்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை முப்பதாயிரம் ரூபாய் செலுத்திவந்துள்ளார்.

 

அதன்படி தவணை தொகையை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதிக மழையின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக சின்னதுரை செலுத்த வேண்டிய மூன்று தவணைப் பணம் மட்டும் நிலுவையிலிருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை, கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், விவசாய வேலை செய்து கொண்டிருந்த சின்னதுரை வயலுக்கு அவரை தேடி வந்தனர். கடன் தொகையை ஏன் தொடர்ந்து செலுத்தவில்லை என்று  கேட்டு மிரட்டியதோடு கடுமையான வார்த்தைகளால் சின்னத்துரையை திட்டி அவமானப்படுத்தி உள்ளனர். அதோடு அங்கிருந்த டிராக்டரையும் எடுத்துச் சென்றுவிட்டனர். 

 

இதனால் அவமானம் தாங்கமுடியாத சின்னதுரை தனது விவசாய நிலத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த அவரது உறவினர்கள் ஊர்மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சின்னதுரை உடலைக் கைப்பற்றி செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் அவர் சடலத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, மேல்மலையனூர் வட்டாட்சியர் கோவர்தனன், வளத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சின்னதுரையை அவமானப்படுத்திய தனியார் நிதி நிறுவன ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் சின்னதுரையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது. அதன் பிறகு அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையால் போராட்டத்தைக் கைவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்