Skip to main content

அத்தியாவாசிய பொருட்கள் தட்டுபாடு, அடாவடி விலை ஏற்றம்... கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்!!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

கரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவாசிய தேவைக்கு மட்டும் வெளியே வரவேண்டும் என்றும் உத்தரவிட்டு, அத்தியாவாசிய கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியே வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதில் வீட்டுவேலைக்கு செல்பவர்கள், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்லமுடியாமல் தினந்தோறும் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல், குழந்தைகளை வைத்துக்கொண்டு திகைத்து வருகிறார்கள்.  

 

 Essential commodities scarcity, price rise ...


இதனிடையே சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்,  ஊரடங்கு உத்தரவுக்குமுன் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விலையைவிட, ஊரடங்கை பயன்படுத்தி 20 சதவீதம் முதல் 50 சதமான விலையை ஏற்றி, இறக்கமற்ற வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள் என தினக்கூலி தொழிலாளர் மற்றும் சில்லரை வியாபாரிகள் மத்தியில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
 

nakkheeran app



இதுகுறித்து சிதம்பரம் பகுதியை சார்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் கூறுகையில், குறிப்பாக ரிபைன்டு ஆயில் 1லி ரூ80 முதல் ரூ90-க்கு விற்பனை ஆனது, தற்போது 140 வரை விற்கப்படுகிறது. அதேபோல் வெல்லம் கிலோவுக்கு ரூ50 விலை ஏற்றி விற்பனை செய்கிறார்கள். இதேபோல் பூண்டு, அப்பளம், மிளகு உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களின் விலையை அடாவடியாக ஏற்றி விற்பனை செய்வதாக வேதனையடைகிறார்கள். மேலும், குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட் இல்லை என்று டிமாண்ட் ஏற்படுத்தி, எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக விற்பனை செய்கிறார்கள் என்றார்கள்.

இதனால் பல வீடுகளில் குழம்பு வைக்கமுடியாமல் ரேசன் கடையில் கொடுத்த அரிசியை வேகவைத்து கஞ்சி வைத்து ஊறுகாய், துவையல் செய்து சாப்பிடுவதாகவும் கூறுகிறார்கள். மேலும் மாத சம்பளம் வாங்குபவர்கள் பொருட்கள் கிடைத்தால் போதும் என்று எவ்வளவு விலையாக இருந்தாலும் கேள்வியே இல்லாமல் வாங்கி செல்கிறார்கள். நாங்க கடையில் நின்று பொருளின் விலையை கேட்டாலே நிற்காதீங்க போங்க சொல்ற விலைக்கு வாங்குறதா இருந்தா நில்லுங்க என்று எதையோ விரட்டுவதை போல் விரட்டுகிறார்கள்.

இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தட்டுபாடு இல்லாமல் அனைத்து அத்தியாவாசிய பொருட்களும் கிடைக்கவும், ஊரடங்கில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்து, அவர்களின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்