கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில், செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் 100 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர். அப்பொழுது கட்சியில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், ‘விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகு கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியைச் செய்தியாளர்கள் கேட்ட பொழுது, அதிமுகவை பொறுத்தவரை எங்களுக்கு திமுகதான் எதிரணி. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது, அதற்காக, நல்ல மனமுடையவர்கள், எங்கள் கட்சியோடு ஒத்துப்போகின்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் இணைத்துக் கொள்வோம். அவர்களோடு சேர்ந்து, அதிமுக சிறந்த ஆட்சியைக் கொடுக்கும்.
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள எங்களுக்கு முறையாக அழைப்பு விடுத்தால் கட்சியின் மூத்த தலைமை நிர்வாகிகளோடு கலந்துபேசி முடிவு செய்யப்படும் என்றார். அதேபோல் ஓபிஎஸ்-ன் ஆதரவாளராக இருந்த புகழேந்தி அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலாவும் , ஓபிஎஸ்ம் வாயால் தான் வடை சுடுவார்கள் எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பிய போது, “இந்த கேள்வியை ஓபிஎஸ்ஸிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.