Skip to main content

“எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டாம், வேலைக்கு வர அனுமதித்தால் மட்டும் போதும்” - ஒப்பந்த பணியாளர்கள்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021
"Don't make us permanent, just let us come to work" -Contract Employees

 

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூலை மாதம் 2020ஆம் ஆண்டிலிருந்து கரோனா முதல் அலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். முதல் அலை முடிந்து இரண்டாம் ஆண்டு துவங்கிய நிலையில், இன்றுவரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வரக்கூடிய ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றியுள்ளனர்.

 

இவர்களில் பலர் தங்களது குடும்பங்களையும் இழந்துள்ள நிலையில், தற்போது அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர்களைப் பணியிலிருந்து வெளியேற வற்புறுத்திவருகிறது. இரண்டு அலைகளும் முடிந்த நிலையில் நீங்கள் பணியைவிட்டுச் செல்லலாம் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், இன்று (06.07.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் மனு அளித்துள்ளனர். இப்பிரச்சனை குறித்து ஒப்பந்தப் பணியாளர்கள் கூறுகையில், “எங்களை அரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியாளராக வைக்க வேண்டாம்.

 

ஒப்பந்த அடிப்படையிலேயே எங்களை வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து எங்களுக்குப் பணி வழங்கினால் மட்டும் போதும் ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கு வழங்கக்கூடிய அதே மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை முறையாக வழங்கிட வேண்டும் என்று தங்களுடைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவந்த எங்களை தற்போது பணியிலிருந்து போக கட்டாயப்படுத்துவது எங்களுடைய வாழ்வாதாரத்தை அதிகளவில் பாதிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டாம் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியைத் தொடர அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்