Skip to main content

''பிஇடி பீரியடை கடன் வாங்காதீர்கள்''-ஆசிரியர் தினத்தில் உதயநிதி கோரிக்கை  

Published on 05/09/2024 | Edited on 05/09/2024
DMK

'செப்டம்பர் 5' ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சென்னை அடுத்த வண்டலூரில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 339 ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயுடன் வெள்ளி பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்குகிறார். 10 விரிவுரையாளர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''மாணவர் நலனில் ஆசிரியர் போலவே சிந்தித்து திட்டங்களை தமிழக முதல்வர் வகுத்து வருகிறார். தமிழ் சமுதாயத்திற்கு மானமும் அறிவும் ஊட்டியவர்கள் ஆசிரியர்கள். நம்முடைய அரசின் பாடத்திட்டத்தைப் பற்றி ஒருவர் குறை சொல்லி இருக்கிறார். அவருக்கு நம்முடைய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு சிறந்த பதிலை கொடுத்திருக்கிறார்.

என்னை பொறுத்தவரை மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டுகின்ற கல்விமுறை தான் சிறந்த கல்வி முறை. அந்த வகையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்விமுறை தான் மாணவர்களை சிந்திக்க வைக்கின்ற, எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று பகுத்தறிவோடு கேள்வி கேட்கின்ற கல்வி முறையாக அமைந்திருக்கிறது. தமிழக பாடத்திட்டத்தில் படித்து எத்தனையோ பேர் மிகச் சிறந்த விஞ்ஞானிகளாக உள்ளார்கள். வீரமுத்துவேல் மாதிரி இஸ்ரோவில் பெரிய பொறுப்புகளிலும் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த பல பேர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழக அரசின் கல்விமுறையை குறை சொல்வது எந்த நாளும் ஏற்க முடியாது. அப்படி யாராவது குறை சொன்னால் அது நமது பள்ளி மாணவர்களை; நமது ஆசிரியர்களை அவமதிப்பதற்கு சமம். அதனை தமிழக முதல்வரும், திராவிட மாடல் அரசும் அனுமதிக்காது.

நான் என்னுடைய விளையாட்டுத்துறை நிகழ்ச்சியை விட அதிகமாக கலந்து கொள்வது பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி தான். இங்கிருக்கும் அமைச்சர்களிலேயே அன்பில் மகேஷ்தான் அதிகமாக சுற்றிக் கொண்டே இருப்பார். எப்பொழுதுமே பள்ளிகளில் சென்று ஆய்வு செய்து கொண்டிருப்பார் அல்லது வெளிநாட்டில் இருப்பார். சிறந்த மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு போய்விடுவார். ஒரு வாரத்திற்கு முன்பு கூட அவர் ஹாங்காங்கில் இருந்தார்.

இந்த நேரத்தில் இங்கு வந்துள்ள ஆசிரியர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். வழக்கமாக நான் வைக்கின்ற கோரிக்கை தான். நீங்கள் எல்லாம் விருது பெற்றுள்ள ஆசிரியர்கள். நீங்கள் விருது பெறுவதைப் போல நம்முடைய மாணவர்களும் விளையாட்டுகளில் பதக்கங்களை பெற வேண்டும். நன்றாக விளையாடுகின்ற மாணவன் ஆரோக்கியமாக இருப்பான். ஆரோக்கியமாக இருக்கும் மாணவன் தான் நன்றாக படிப்பான். எனவே பிஇடி பீரியடை கடன் வாங்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்''என்றார்.

சார்ந்த செய்திகள்