Skip to main content

கல்வியை அரசியலாக்கக் கூடாது: அன்புமணி

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

கல்வியை அரசியலாக்கக் கூடாது உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்துள்ளார். 
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, இதுகுறித்த கருத்துக்களை வரும் 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

 

 

 

பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவதென்பது மிகப்பெரிய நிர்வாக மாற்றம் ஆகும். அதுகுறித்து கருத்து தெரிவிக்க வெறும் 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு இருப்பது போதுமானதல்ல. இம்மாதம் 18-தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதில் இதற்கான மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதற்காகத் தான் மத்திய அரசு இவ்வளவு வேகம் காட்டுகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதே மாற்றத்தை செய்ய முயற்சிகள் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அம்முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், சமூகநீதி ஆர்வலர்கள் உள்ளிட்ட எவரது கருத்துக்கும் மதிப்பளிக்காமல் இந்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர்கல்வி ஆணையத்தை அமைப்பது என்பது சீர்திருத்தமாக இருக்காது... சீரழிவாகவே இருக்கும்.
 

பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்டதில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. 1949-ஆம் ஆண்டு சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவில், ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் தான் மூளையாக செயல்பட்டு பல்கலைக்கழக மானியக் குழு எத்தகைய தன்மை கொண்டதாக இருக்க  வேண்டும் என்பதை தீர்மானித்தார். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமின்றி உயர்கல்வியிலும், உயர்கல்வி நிர்வாகத்திலும் சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும் என்பதும் பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். ஆனால், எந்த நோக்கங்களுக்காக பல்கலைக்கழக மானியக்குழு  உருவாக்கப்பட்டதோ, அவற்றின் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

 

 

 

மானியக்குழு அமைக்கப்பட்டு 62 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், உயர்கல்வி  இன்னும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறவில்லை. அதுமட்டுமின்றி உயர்கல்வி நிர்வாகத்தில் சமூக நீதியை கொண்டு வர முடியவில்லை. தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதிலுள்ள பல்வேறு துறைகளின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்களாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை. மற்ற மத்திய பல்கலைக்கழகங்களிலும் இதேநிலை காணப்படும் நிலையில், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைப்பது உயர்கல்வியில் சமூக நீதியை சிதைத்து விடும். உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இந்த மாற்றம் வழி வகுக்கும்.

 

Do not politicize education: You have to abandon the decision of setting up a higher education commission


 

பல்கலைக்கழக மானியக் குழு கல்வியாளர்கள் அமைப்பாக செயல்பட்டு வந்த நிலையில், புதிய அமைப்பு அரசியல் அமைப்பாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் இருப்பர். அவர்கள் அனைவரும் கல்வியாளர்கள். மேலும் மானியம் வழங்குதல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் மானியக்குழுவுக்கு இருக்கிறது. ஆனால், இந்திய உயர்கல்வி ஆணையத்துக்கு மானியம் வழங்கும் அதிகாரம் இல்லை. அதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பறித்துக் கொண்டது. அதேநேரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை  எடுப்பதற்காக கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக உயர்கல்வி ஆணையத்தில் இடம்பெறும் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட  14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே கல்வியாளர்களாக இருப்பார்கள்; மற்றவர்கள் அதிகாரிகளாக இருப்பர்.
 

இதனால், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக மானியக்குழுவால்  நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலை மாறி, மத்திய அரசுக்கு ஆதரவான பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்படும் ஆபத்து உள்ளது. பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் புதிய அமைப்பிடமிருந்து பறிக்கப்பட்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தலைமையிலான 10 உறுப்பினர் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. அக்குழு பரிந்துரைப்படி எந்த ஒரு கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் உயர்கல்வி ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது மிக, மிக ஆபத்தானதாகும்.
 

பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர்களை அரசே நினைத்தாலும் நீக்க முடியாது. அதனால் கல்வியாளர்கள் யாருக்கும் அஞ்சாமல் சீர்திருத்தங்களை செய்து வந்தனர். ஆனால், புதிய அமைப்பில்  உள்ள 14 பேரையும் மத்திய அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நீக்க முடியும். இதனால் புதிய அமைப்பு மத்திய ஆட்சியாளர்களின் கைப்பாவையாகவே செயல்படும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் அல்லது இந்தியை திணிக்க மத்திய அரசு முயலும் போது, அதை ஏற்க மறுத்தாலோ, எதிர்ப்பு தெரிவித்தாலோ அதன் அங்கீகாரத்தை உயர்கல்வி ஆணையத்தால் நீக்க முடியும். இதனால் இந்தியாவிலுள்ள எந்த பல்கலைக்கழகமும் சுதந்திரமாக செயல்பட முடியாது; மத்திய அரசின் கொள்கை பரப்பும் அமைப்பாகவே செயல்பட முடியும். இவ்வாறு இருந்தால் உயர்கல்வியின் தரம் எந்த வகையிலும் உயராது; மாறாக தாழும்.

 

 

 

உயர்கல்வியை முழுமையான வணிகமயமாக்குதல்,  பெரு வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்  பல்கலைக்கழகங்களை ஒப்படைத்து கார்ப்பரேட் மயமாக்குதல், பன்னாட்டு நிறுவனங்களை மறைமுகமாக நுழைத்தல் ஆகிய தீமைகளையும் புதிய அமைப்பு அனுமதிக்கும். பல்கலைக்கழகங்கள் மீதான மாநில அரசுகளின் அதிகாரங்களையும் உயர்கல்வி ஆணையம் பறிக்கும். எனவே, சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான உயர்கல்வி ஆணையத்தை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்