Skip to main content

பாலியல் வன்கொடுமை... ஆறு வயது சிறுமி பலி... போராட்டத்தில் குதித்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி...!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

வேடசந்தூர் அருகே ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

 

Dindigul incident

 



திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் இராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதியினர் தனியார் ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் சிறுவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அதுபோல் சிறுமியும் அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சிறுமியின் தாய் நூற்பாலை வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் தந்தை மட்டும் இருந்தார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் இரு குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு சிறுமி விளையாட செல்வதாக தனது அண்ணனிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை 4 மணி அளவில் வேலை முடிந்து தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது உனது மகள் தலையில் அடிபட்டு ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் பகுதியில் மயங்கி கிடப்பதாக பொதுமக்கள் சிலர் கூறினார்கள்.

 



அதைக்கண்டு கணவனும் மனைவியும் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது தனது மகள் தலையில் பலத்த காயத்துடன் அங்குள்ள டிராக்டர் முன்பு மயங்கி கிடந்தாள். உடனே அந்த சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை மூலம் கொலை  செய்திருப்பது தெரியவந்தது.

இந்த விஷயம் கூம்பூர் போலீஸ்சாருக்கு  தெரியவே இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மருத்துவமனையில் இருந்த சிறுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த டிராக்டர்  அருகே ரத்தம் சிதறி கிடந்தது. மேலும் அருகே உள்ள சோளக்காட்டில் கதிர்கள் சாய்ந்து இருந்தன. 

எனவே சிறுமியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் சோளக்காடு வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். அதைத்தொடர்ந்து சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் யார் யார் என்பது குறித்தும் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடியவர்கள் பற்றியும் மாலை நேரத்துக்கு பிறகு யாரெல்லாம் ஊரில் இல்லை என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் சிறுமியின் உடல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

 



ஆனால் ஆறு  வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தான் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனே  கைது செய்தால்தான் குழந்தையின் உடலை வாங்குவோம் என திண்டுக்கல் மருத்துவமனையில் இருந்த போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதோடு இந்த விஷயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான பாலபாரதியின் காதுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து பாலபாரதி முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திண்டுக்கல் மருத்துவ மனைக்கு வந்து குற்றவாளிகளை உடனே கைது செய்யுங்கள் என்று வலியுறுத்தினார்கள். அப்படி இருந்தும் கூட போலீஸார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் மிரட்டியவாரே போஸ்ட்மார்ட்டம் முடிந்த அந்த சிறுமியின் உடலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  கொண்டு போய் எரித்து விட்டனர். 

இதனால் கோபம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் பழனி ரோட்டுக்கு சென்று பாலபாரதி தலைமையில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதன்பின் போலீஸார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 



இதுசம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "பாதிக்கப்பட்ட தாய் தந்தையை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்த போலீசார் குழந்தை தவறி விழுந்து இறந்ததாக கூற வேண்டும் என அவர்களை விடிய விடிய  மிரட்டி இருக்கிறார்களே தவிர உண்மையான குற்றவாளிகளை பிடிக்க இந்த போலீசார் ஆர்வம் காட்டவில்லை. அந்த அளவுக்கு மாவட்ட கலெக்டரும்
, எஸ்பியும் குற்றவாளிக்கு துணை போகிறார்கள். 

உண்மையான குற்றவாளியான உமாசங்கரை தப்பிக்க விட்டுவிட்டனர். அந்த அளவுக்கு சிறுமியின் பலாத்கார கொலைக்கு இந்த அரசு துணை போயிருக்கிறது என்பது வெட்கமாக இருக்கிறது. அதோடு மருத்துவ மனையில் இருந்தபோது உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என்று ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி சீமைச்சாமியிடம் வலியுறுத்தியும் கூட நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் நாங்கள் உடனே பாடி எடுத்துக் கொண்டுபோய் எரிக்க வேண்டும் என கூறி எங்களை எல்லாம் போலீஸாரை வைத்து அப்புறப்படுத்திவிட்டு உடனே கொண்டுபோய்  பாடியை மின்மயானத்தில் வைத்து எரித்து இருக்கிறார்.

அந்த அளவுக்கு டிஎஸ்பி சீமைச்சாமி குற்றவாளிக்கு  உடந்தையாக செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட டிஎஸ்பி சீமச்சாமியை உடனே  பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுபோல் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் மாவட்டம் மட்டுமல்ல மாநில அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மாபெரும் போராட்டம் வெடிக்கும்" என்று கூறினார்.
  

சார்ந்த செய்திகள்