Skip to main content

“நீட்டிற்கு எதிரான அறப்போராட்டம் நீட் ஒழியும் வரை தொடரும்” - அமைச்சர் உதயநிதி

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
"The crusade against NEET will continue until NEET is abolished" - Minister Udayanidhi

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடைபெற்றது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதே சமயம் நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. தங்கை அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து உயிர்களை பறிக்கின்ற நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி உண்ணா நிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர் அணி, அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு நமது இலக்கு எனும் முழக்கத்துடன் இதுவரை 85 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துகளை பெற்று ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி காட்டியுள்ள நிலையில், நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியாய் முழுமையாய் பெற்றுத் தீரும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் லட்சியத்துக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் அநீதியை எதிர்த்து, ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினோம். 50 நாட்களில் 50 லட்சம்  கையெழுத்து என்ற இலக்கோடு பணிகளை தொடங்கினோம். நீட் ஒழிப்பிற்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்கள் பேரலையாக திரண்டு வந்து கையெழுத்திட்டனர்.

இணையம் மற்றும் அஞ்சல் வழியில் 85 லட்சம் பேர் கையெழுத்திட்ட நிலையில், அஞ்சல் அட்டையில் பெறப்பட்ட கையெழுத்துகளை சேலத்தில் நடைபெற்ற  திமுக இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாட்டு மேடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினோம். இந்த கையெழுத்துகள் அனைத்தும் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்த மாபெரும் இயக்கத்தில் கழகத்துடன் கைகோர்த்து நின்ற தமிழ் நாட்டு மக்களுக்கும், இப்பணியை சிறப்போடு மேற்கொண்ட திமுகவினர் அனைவருக்கும் என் அன்பும், நன்றியும். நீட்டிற்கு எதிரான நம் அறப்போராட்டம் நீட் ஒழியும் வரை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்