Skip to main content

பாஜக நிர்வாகி கைது; நீதிமன்ற காவலுக்கு நீதிபதி மறுப்பு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 court granted bail to Sowdhamani

பாஜக செயற்குழு உறுப்பினர்  சவுதாமணி என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மனது வலிக்கிறது. வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது. மது, கஞ்சா, திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு” என்று பதிவிட்டு. அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள், சீருடையுடன் கையில் பாட்டிலில் மது போன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்று வீடியோ பதிவு உள்ளது.

இதனைத் தொடர்ந்து திருச்சி திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் அருண், சவுதாமணி பகிர்ந்த வீடியோவை பார்க்கும் போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து, குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், குழந்தைகளை சீர்கெடுக்கும் விதமாக அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.  ஏதோ உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பியும், குழந்தைகள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற செய்தியை சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என தெரிந்தும் அந்த வீடியோவை பகிர்ந்த சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், சென்னையில் இருந்த சவுதாமணியை கைது செய்தார். மேலும் சவுதாமணி மீது இந்திய தண்டனைச் சட்டம் கலகம் செய்யத் தூண்டுதல்( 153 ) அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி பாலாஜி முன் நிறுத்தினர். வழக்கை  விசாரித்த நீதிபதி பாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி சவுதாமணியின் நீதிமன்ற காவலை நிராகரித்து பிணையில் விடுவித்தார். மேலும் போலீசார்  விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்