செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை சேர்க்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (28/07/2022) மாலை 05.30 மணிக்கு நடைபெறும் விழாவில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உள்ளிட்ட கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக, தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த விளம்பரங்களில் தமிழக முதலமைச்சரின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க.வினர், அந்த விளம்பர பலகையில் பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும், படத்தையும் சேர்க்கக்கோரி, சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவரது தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, மனுவை வழக்காக தாக்கல் செய்யவும், இன்று (28/07/2022) மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், உயர்நீதிமன்றக் கிளை தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, இவ்வழக்கு இன்று (28/07/2022) பிற்பகல் 02.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும், புகைப்படம் இடம் பெற்றிருக்கலாமே. ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பிரதமர் வருகை ஜூலை 22- ஆம் தேதியே உறுதி செய்யப்பட்டது. இன்றைய நாளிதழில் கூட செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படம் வெளியிடப்பட்டுள்ளது" என வாதிட்டார். அத்துடன், பிரதமர் படம் இடம் பெறாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்ற மனுதாரர் வாதத்தை ஏற்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.