Skip to main content

கரோனா அச்சத்தால் பிரசவம் பார்க்க தனியார் மருத்துவமனை மறுப்பு! கலெக்டரிடம் புகார்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று தெரியவந்ததும் அவர்களை ஆய்வு செய்து கரோனா சோதனை செய்தபோது 46 பேருக்கு கரோனா  வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதில் திண்டுக்கல் மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் மற்றும் மக்கான்தெரு, பூச்சி நாயக்கம்பட்டி, ஜமால் தெரு உள்பட சில பகுதிகளில் 35 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததன்பேரில், அப்பகுதிகளை போலீசார் சீல் வைத்து முடக்கியும், சில பகுதிகளை  தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

 

 corona virus impact - Private hospital refuses to  childbirth - Collector Inquiry



அப்பகுதியில் உள்ளவர்களுக்கு உடல்நலம் மற்றும் பெண்களுக்கு பிரசவம் போன்ற மருத்துவ சிகிச்சை உதவிகள் செய்யக்கூட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பலர் தயங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி மாநாட்டிற்கு போய்விட்டு வந்தவர்களில் பலருக்கு கரோனா வந்துள்ளது என்பது உண்மைதான். அதற்காக நகரில் உள்ள ஒட்டுமொத்தவர்களையும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
 

nakkheeran app



அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், "தனது உறவினரான பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தவருக்கு திடீரென கடந்த இரண்டு நாளைக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது. உடனே நாங்கள் எப்போதும் பார்க்கக்கூடிய நாகல் நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்குள்ள மருத்துவர்கள் பிரசவம் பார்க்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன்பின் நகரில் உள்ள சில தனியார் மருத்துவமனைக்கு சென்றும் கூட பிரசவம் பார்க்க மறுத்துவிட்டதால், கடைசியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சேர்த்து அந்த பெண்ணுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதுபோல் சில கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்காததால் அரசு மருத்துவமனைக்கும் போயிருக்கிறார்கள். 

சில ஸ்கேன் சென்டர்களில் ஸ்கேன் எடுப்பதில்லை. மொத்த வியாபாரிகளும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர்களும்கூட முஸ்லிம் சிறு வியாபாரிகளுக்கும் பொருட்கள் கொடுக்க மறுக்கிறார்கள். அதுபோல் தாய்பிள்ளை போலவும், மாமன் மச்சான் போலவும் பேசி வந்த மற்ற சமூகத்தினர் பெரும்பாலனோர்கூட, இந்த கரோனா வைரஸால் பேசவே மறுக்கிறார்கள். ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு எங்கள் இஸ்லாம் சமுதாய மக்களை ஒதுக்கி வைப்பவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரான யாசர் அராபத் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிடம் சொல்லியுள்ளார்.


இதுதொடர்பாக கலெக்டரிடம் கேட்டபோது, மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய ஊர்கள் இருக்கக்கூடிய சில பகுதிகளை கரோனாவால் தனிமைப்படுத்தி, அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம். அதில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டார்கள் என்றால் அங்குள்ள நம்பரில் தொடர்பு கொண்டால் உடனே ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

 

c



அதுபோல் அந்தப் பகுதிகளுக்கு நடமாடும் ஏ.டி.எம். மெஷின் போய் வருகிறது. ஒரு ஏரியாவில் எருமைப்பால் வேணாம், பசும்பால்தான் வேண்டும் என்று சொன்னதின் பேரில் அதையும் கொடுக்க சொல்லி வருகிறோம். அந்த அளவுக்கு  தனிமைப்படுத்தபட்டவர்கள் மனதளவிலும் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.


அப்படி இருக்கும்போது, ஒரு பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் பிரசவம்  பார்க்கவில்லை என்று புகார் வந்ததைத் தொடர்ந்து, விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அதுபோல் இஸ்லாம் மக்களை புறக்கணிக்கிறார்கள் என்ற தகவல் வந்தது, அதையும் தீவிரமாக  விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்