கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது நன்னாவரம். இதன் துணை கிராமம் திருநறுங்குன்றம். இந்த ஊரின் மலைமீது அப்பாண்டநாதர் என்ற ஆலயம் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நகரங்களிலிருந்தும் அப்பாண்ட நாதரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்வார்கள். அதிலும் குறிப்பாக சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாலய இறைவனை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இந்த ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான திருவிழா நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
அப்படிப்பட்ட இந்தக் கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள், குளித்துவிட்டு சாமியை தரிசனம் செய்வதற்கும், அந்த கிராம விவசாயிகள் பாசனம் பெறுவதற்கும், அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் அப்பகுதியில் வாழ்ந்த ஒருவர் சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்றை உருவாக்கி அதில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
அந்த குலத்திற்கு பெயர் செட்டியார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட செட்டியார் குளத்தை காணவில்லை என்று அப்பகுதி சிபிஎம் கட்சியை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் அலமேலு உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், செட்டியார் குளத்தை காணவில்லை கண்டுபிடித்து தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நிலத்தடி நீர்மட்டம் உயரவும் விவசாயம் செய்யும் இந்த கிராம மக்களின் இன்றியமையாத தேவையைக் கருத்தில் கொண்டும் அந்த குளம் உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட குளத்தை தற்போது தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த குளம் இருந்த இடமே தெரியாத அளவில் உள்ளது.
எனவே வருவாய் துறையினர் செட்டியார் குளத்தை அளவீடு செய்து, தனிநபர்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து அதை மீட்டு குளத்தை சுத்தப்படுத்தி தண்ணீர் தேங்க வைத்து விவசாயிகள், கிராம மக்கள் பயன்பாட்டுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அலமேலு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவருடன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் சிபிஎம், கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கொளஞ்சிநாதன் மற்றும் சிவகுமார், அறிவழகன், திமுக பிரமுகர் பாவாடை ஆகியோரும் அலமேலுவுடன் சென்று வட்டாட்சியரிடம் குளத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.