சென்னையில் கல்லூரி தொடங்கிய நாளிலேயே கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் என்ற பெயரில் மாநகர பேருந்துகளை சிறைபிடித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டனர். இப்படி வரம்பு மீறி அட்டகாசத்தில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என மாணவர்களை எச்சரித்து அனுப்பியது காவல்துறை.
கோடை விடுமுறை முடிந்து கலை கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை செனாய் நகர் புல்லா அவென்யூவில் 40எ என்ற மாநகர பேருந்தை பயச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிறைபிடித்தனர். பேருந்தின் முன்பக்கம் பேனர் கட்டிய மாணவர்கள் பேருந்தில் ஏறிக்கொண்டதோடு மட்டுமின்றி பேருந்தின் மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் முன்னே பைக்கில் கூச்சல் எழுப்பிக்கொண்டே சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட பேருந்து ஓட்டுனரும் பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளை செய்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடார் என்று கீழே விழுந்தனர்.
தகவல் தெரிந்து அங்கே சென்ற காவல்துறையினரை பார்த்ததும் எல்லா மாணவர்களும் ஓட்டம் பிடிக்க சிக்கிய 13 பேருக்கு அட்வைஸ் சொல்லி அனுப்பி வைத்தது காவல்துறை. அதேபோல் ராயப்பேட்டை அருகே 21 எண் பேருந்தை சிறைபிடித்து பேருந்தின் மீது ஏறியபடியும் ஜன்னல் கம்பிகளை பிடித்தபடியும் தொங்கிக்கொண்டே பயணம் செய்தபடி அட்டகாசம் செய்தனர்.
அதேபோல் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை மெரினா சாலையில் 60 எண் கொண்ட பேருந்தில் அட்டகாசம் செய்தபோது 10 க்கும் மேற்பட்டவர்களை அண்ணா சதுக்கம் போலீசார் மடக்கி பிடித்தனர். அதேபோல் அயனவரத்தில் பேருந்து நாள் கொண்டாட பேனருடன் நின்றிருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பேருந்து தினம் என்று இதுபோல் அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு கல்லூரிக்கு தெரிவித்து தற்காலிக நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இதனால் பின்னாளில் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் வரும் எனவும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.