நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படும் கிராம பஞ்சாயத்துகளை அங்கீகரித்து அவற்றை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தேசிய கிராம பஞ்சாயத்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் டெல்லியில் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கிராம பஞ்சாயத்து விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகச் செயல்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு விருதுகளை வழங்கி தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதில் கோயம்புத்தூர் மாவட்டம் பிச்சனூர் ஊராட்சி, சிறந்த நிர்வாகத் திறன் பிரிவில் முதலிடம் பிடித்தது. இதற்கான விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பிச்சனூர் ஊராட்சி செயலாளர் உமா மகேஸ்வரி பெற்றுக்கொண்டார். தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டுக்கான தேசிய கிராம பஞ்சாயத்து விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே கிராம ஊராட்சி பிச்சனூர் என்பது குறிப்பிடத்தக்கது.