ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியத் தொல்லியல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த சர் ஜான் மார்ஷல் என்பவர் சிந்து சமவெளி பண்பாடு என்பது திராவிட நாகரிகம் எனக் கடந்த 1924ஆம் ஆண்டு கண்டறிந்து கூறினார். இந்நிலையில் இதனை நினைவு கூர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். இதனை நான் நன்றியுடன் நினைவு கூர்ந்து, ஜான் மார்ஷலுக்கு நன்றி கூறுகிறேன்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் கலாச்சாரத்தைச் சரியாக அறிந்து கொண்டு அதைத் திராவிட பங்குடன் இணைத்தார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவைச் சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையைத் தமிழகத்தில் நிறுவப்படும் என்று எனது அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.