Skip to main content

“யோகா கலையை உருவாக்கி உலகிற்கு அளித்த இடம் சிதம்பரம்” - ஆளுநர் ரவி

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Chidambaram created the art of yoga and gave it to the world says Governor Ravi

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் யோகா துறை சார்பில் உலக யோகா தின விழா இன்று (ஜூன் 21) நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது துணைவியார் லட்சுமி ரவி ஆகியோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். ஆளுநருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் மற்றும் மாணவ, மாணவிகளும் யோகா செய்தனர்.

 

பின்னர் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி யோகா மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், “ஆன்மீக நகரமான சிதம்பரம் ஆதியோகி நடராஜரின் இருப்பிடம். யோக ரிஷி பதஞ்சலி, திருமூலர் இருந்து வழிபட்ட இடம் இது. மெகா யோகா பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தைப் பாராட்டுகிறேன். உலகிற்கு நமது நாட்டின் பரிசு யோக கலை. சிதம்பரம் யோக கலை உருவான இடம். உருவாக்கியவர்கள் இருந்த இடம். இவ்விடத்தை தனது பிறப்பிடமாகத் தொடங்கிய யோகா உலகம் முழுவதும் பரவியது. இன்று ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் இயற்றிய திருமந்திரத்தை பதஞ்சலி முனிவர் பயன்படுத்தினார்.

 

Chidambaram created the art of yoga and gave it to the world says Governor Ravi

 

ஆசனங்களை பல தளங்களில் செயல்படுத்தி புதுமைகளை செய்திருக்கிறார். யோகா ஒரு சூத்திரம். உடலை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. செலவின்றி உடலை சமப்படுத்தி பாதுகாக்க உதவுகிறது. யோகா நமது வாழ்க்கை. பதஞ்சலியின் வழிபாட்டுடன் தொடங்கி முடியும் யோகா ஒரு அமைதியான சூழலை உருவாக்க உதவுகிறது. யோகா கலை பயிற்சியை கிராமங்கள், நகரங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரப்ப வேண்டும். அப்போது நமது உடல் நலத்தை எளிய முறையில் செலவின்றி பாதுகாக்க முடியும். எனது சிறிய வயதில் பள்ளி பருவத்திலிருந்து யோகா செய்வதால் நல்ல உடல்நலத்தை பெற முடிந்தது.  எனது உடல்நலத்திற்கு யோகா முக்கிய காரணமாக உள்ளது” என்றார். 

 

ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம், ஏஎஸ்பி பி.ரகுபதி, உதவி ஆட்சியர் சுவேதா சுமன், உடற்கல்வித்துறை இயக்குநர் செந்தில்வேலன், யோகா மைய இயக்குநர் வெங்கடாஜலபதி, மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு நன்றி கூறினார். மெகா யோகா நிகழ்ச்சியில் 83 வயது மூத்த யோகா பயிற்சியாளர் கிருஷ்ணனின் யோகா செயல் விளக்கமும், ‘யோகாவில் 133 திருக்குறள் அதிகாரம்’ என்ற தலைப்பில் கோவில்பட்டியை சேர்ந்த  9 வயது இளம் சாதனையாளர் வி.ரவீனாவின் யோகா நிகழ்ச்சியும், ராமேஸ்வரம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினரின் யோகா பயிற்சியும், கின்னஸ் சாதனையாளர் சீர்காழியைச் சேர்ந்த சுபானுவின் 108 சிவதாண்டவத்தின் யோகா செயல் விளக்கமும், கடலூர் ஹேமந்த் அகாதெமி ஆதரவற்றோர் குழந்தைகள் யோகா பயிற்சியும், மாணவர்களின் மல்லர் கம்பம் நிகழ்ச்சியும் நடந்தது.

 

 

சார்ந்த செய்திகள்