Skip to main content

''முதல்வர் ஆளுநரை விரோதியைப் போல் பார்க்கிறார்''- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

 '' The Chief Minister repeatedly sees the Governor as something hostile '' - Vanathi Srinivasan

 

மாநில முதல்வர் ஆளுநரை விரோதியைப் போல் பார்ப்பதாக  பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

'போஷன் அபியான்' எனும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு வழங்குவது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ''ஊட்டச்சத்து குறைபாட்டினை குழந்தையிலேயே தாய் கர்ப்பிணியாக இருக்கும்போதே சரிசெய்துவிட்டால் அதுவே ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதனால் தான் 'போஷன் அபியான்' என்ற இந்த திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசின் நிதியுதவியோடு, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலத்தின் முதல்வர், ஆளுநர் என இருவருக்கும் தனித்தனி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைதான் உயர்ந்தது, அல்லது நீதித்துறைதான் உயர்ந்தது, அல்லது நிர்வாகத்தில் இருக்கக்கூடியவர்கள்தான் அமல்படுத்தி முடிவெடுக்கக்கூடியவர்கள், எனவே அவர்கள் உயர்ந்தவர்கள் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கிடையாது. ஆனால் முதல்வர் திரும்ப திரும்ப ஆளுநரை ஏதோ விரோதியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்.

 

சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் போட்டாலும் அதை அப்படியே ஆளுநர் அமல்படுத்த வேண்டும் என்பது கிடையாது.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு சில வரைமுறைகள் உள்ளது. அப்படி ஆளுநர் சட்டப்படி நடக்கவில்லை என்றால் நீதித்துறையின் வாயிலாக நீங்கள் கேள்வி கேட்கலாமே தவிர தெருவில் இறங்கி ஆளுநரை அவமானப்படுத்துவதையோ, அசிங்கப்படுத்துவதையோ நிச்சயமாக பாஜக ஒத்துக்கொள்ளாது. இளையராஜா மோடியை ஆதரித்துப் பேசினால் பதவிக்காக பேசுகிறார் என்று சொல்கிறார்கள். அவர் மட்டுமல்ல மோடியை ஆதரித்து யார் பேசினாலும் பதவிக்காக, பயத்தால் பேசுகிறார்கள் அல்லது அவர்களுக்கு பின்னல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதேபோல் மோடியை விமர்சிக்கும் நபர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அந்த கேள்வியை நாங்கள் கேட்கிறோம். மோடியை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நபர்கள் அதுவும் மக்கள் பிரதிநிதிகளே அவருக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துகொள்கிறார்கள் என்றால் அவர்கள் பின்னால் இருப்பது யார்?'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்