Skip to main content

சென்னை கோயம்பேட்டிலிருந்து திண்டுக்கல் சிறுமலை வரை பரவிய கரோனா! 

Published on 04/05/2020 | Edited on 04/05/2020
 dindigul




திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 81 பேர் கரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 72 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள ஆறு பேருக்கு கரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில்தான் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து திண்டுக்கல் திரும்பியவர்களை காவல் துறையினரும், சுகாதார துறையினரும் கண்டறிந்து நோய் தொற்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை செய்த ஒருவர் திண்டுக்கல் திரும்பிய நிலையில், அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள அவரது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை முதல்கட்ட சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 


மேலும் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை, பழையூர் பகுதிகளில் வெளியாட்கள் உள்ளே வர தடை விதித்து, கிராமம் முழுவதும் கிருமி நாசினி அளிக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக ஊர் திரும்பியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்