Skip to main content

காவிரி நீர் ஆணையத்திற்கு அவமதிப்பு: கர்நாடக அரசு மீது என்ன நடவடிக்கை? ராமதாஸ் கேள்வி

Published on 22/06/2018 | Edited on 22/06/2018


காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசு அதன் இயல்பைக் காட்டிவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வரும்வரை காத்திருக்க முடியாது என்றும், கர்நாடக விவசாயிகளின் தேவைகளுக்காக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்திருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படாததால் கர்நாடகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதைப் போலவும், ஆணையம் அமைக்கப்படாததற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் தான் காரணம் என்பதைப் போலவும் தோற்றத்தை ஏற்படுத்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முயல்கிறார். இது காவிரி விவகாரத்தை திசைதிருப்பும் செயலாகும். உண்மையில் காவிரிப் பிரச்சினையில் இப்போது ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளுக்கும் கர்நாடகம் தான் காரணம் ஆகும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்த அறிவிக்கை ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த ஆணையத்தில் தமிழகத்தின் சார்பில் இடம்பெறும் உறுப்பினரின் பெயர் அடுத்த நாளே அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும் அறிவிக்கப் பட்டனர். அப்போதே கர்நாடக அரசும் அதன் சார்பில் காவிரி ஆணையத்தில் இடம்பெறும் உறுப்பினரின் பெயரை அறிவித்திருந்தால் காவிரி ஆணையம் 20 நாட்களுக்கு முன்பே அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்திருக்கும். அவ்வாறு வந்திருந்தால் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இருந்திருக்காது.
 

 

 

ஆனால், காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் குறைந்த அமைப்பு என்றாலும், அதைக்கூட ஏற்றுக்கொள்ள கர்நாடகம் தயாராக இல்லை. மாறாக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் தங்கள் பாதிக்கப்பட்டு விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கர்நாடக அணைகளில் உள்ள நீரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.

தமிழ்நாட்டுக்கு நடப்பு ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய 10 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டு விட்டதைக் காரணம் காட்டும் குமாரசாமி, அதேபோல் கர்நாடகம் அதன் தேவைக்காக தண்ணீரை பயன்படுத்திக் கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது என்று கூறுகிறார். இது அபத்தமான வாதம் ஆகும். தமிழ்நாட்டுக்கு கர்நாடக உளமாற தண்ணீர் திறந்து விடவில்லை. மாறாக கபினி அணை நிரம்பி வழிந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி தான் தண்ணீர் திறந்து விட்டது. இப்போது கூட அணை நிரம்பி வழியும் பட்சத்தில் கர்நாடகம் நினைத்தால் கூட தண்ணீரை தடுக்க முடியாது. எனவே, காவிரி ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதையும், கர்நாடக பாசனப் பயன்பாட்டுக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.

இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மிகவும் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் பணி முடிந்து விட்டதாக தமிழக ஆட்சியாளர்கள் கருதக்கூடாது. ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குத் தொடர தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்