Skip to main content

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வன்கொடுமை சட்டம் பாயுமா? ஆணையத்தின் அதிரடி விசாரணை!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

tn state information commission

 

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருக்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால். தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்தவர். தகவல் ஆணையத்தில் இவரது பணிகள் மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் உண்டு. சுருக்கமாகச் சொல்வதானால், தகவல் ஆணையத்தை ஒரு சிறை போலத்தான் நடத்திவருகிறார்.

 

சமூக ஆர்வலரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளருமான சென்னையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரின் வழக்கு ஒன்று கடந்த மாதம் தகவல் ஆணையத்திற்கு வந்திருக்கிறது. வழக்கின் விசாரணையின்போது, ராஜகோபாலுக்கு எதிரே அமர்ந்திருந்தார் கல்யாண சுந்தரம். அப்போது, ’’உயர் நீதிமன்ற நீதிபதிக்குரிய அந்தஸ்த்தைப் பெற்றவன் நான். என் முன்னால் எப்படி உட்காரலாம்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ராஜகோபால். அதற்கு தனது வயதின் முதுமையைக் காரணம் காட்டிய கல்யாண சுந்தரம், “சீனியர் சிட்டிசனை கௌரவமாக நடத்தணும்னு நீதிமன்றங்களும் அரசாங்கங்களும் சொல்லியிருக்கிறது. அதனால் உட்கார்ந்திருப்பதும் எழுந்து நிற்பதும் என் மனநிலையைப் பொறுத்தது. எழுந்து நிக்கணும்னு கட்டாயப்படுத்தக்கூடாது’’ என்று சொல்லியிருக்கிறார்.

 

உடனே ராஜகோபால், “என் முன்னால கையை நீட்டியெல்லாம் பேசக்கூடாது. உன் தகுதிக்கேற்ப நடந்துக்கணும்’’ என்று சொல்ல, “கையை நீட்டிப் பேசக்கூடாதுன்னு நீங்க யாரு எனக்கு சொல்றது? கையை நீட்டிப் பேசக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? கையை நீட்டிப் பேசறது என் சுபாவம். அதையெல்லாம் நீங்க கேள்வி கேட்க முடியாது. அப்புறம்… தகுதியைப் பத்தி பேசறீங்க. தகுதின்னா என்ன?” என்று கல்யாண சுந்தரம் கோபமாக கேட்டுள்ளார்.

 

அதற்கு ராஜகோபால், “உன் தகுதி என்னென்னு எனக்குத் தெரியும். எல்லோரும் சொல்லியிருக்காங்க’’ என்று கூற, “நான் தாழ்த்தப்பட்டவன்கிற அர்த்தத்தில நீங்கள் பேசறீங்க. இப்படி பேசறது வன்கொடுமை சட்டத்தின்படி குற்றம். மனித உரிமைக்கும் எதிரானது’’ என்றெல்லாம் ஒரு பிடி பிடித்திருக்கிறார் கல்யாண சுந்தரம். இதனால் தகவல் ஆணையத்தில் ஒரே ரகளை நடந்திருக்கிறது. வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வெளியே வந்த கல்யாண சுந்தரம், தனக்கேற்பட்ட அவமானத்தை தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு நேரில் சென்று புகாராக தெரிவித்துள்ளார். தமிழில் கொடுக்கப்பட்ட புகாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, குடியரசுத் தலைவர், பிரதமர், தேசிய மனித உரிமைகள் ஆணையர் என பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் கல்யாண சுந்தரம்.

 

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம். அந்தக் கடிதத்தில், இந்தப் புகார் மீது உடனடியாக விசாரித்து தகவல் தெரிவிக்கவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஐ..ஏ.எஸ்.சிடம் இந்தப் புகாரை அனுப்பி, விசாரிக்கச் சொல்லியிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

 

அதன்படி கல்யாண சுந்தரத்தை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார் மணிவாசன். அப்போது ராஜகோபாலால் தனக்கேற்பட்ட அவமானத்தையும், மன உளைச்சல்களையும் விவரித்த கல்யாண சுந்தரம், ஆணையத்தின் விசாரணையின்போது நடந்த அனைத்தையும் சொல்லியிருக்கிறார். மேலும், ’’ராஜகோபால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் நான் சும்மா இருக்க மாட்டேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

 

இதனையடுத்து ராஜகோபாலுக்கு எதிரான வன்கொடுமை புகார் குறித்து விளக்கமளிக்குமாறும், அவரிடம் விசாரிப்பதற்கு அவர் நேரில் வர வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையத்தின் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் மணிவாசன். இது தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. ராஜகோபால் மீது வன்கொடுமை சட்டம் பாயுமா? என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. 

 

இந்த விவகாரம் தகவல் ஆணையத்திலும் பரபரப்பாக எதிரொலிக்க, அவ்வளவு எளிதாக இதனை விட்டுவிடக்கூடாது என உறுதியாக இருக்கிறதாம் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் !

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.