Skip to main content

'குட்கா முறைகேடு தொடர்பாக 21 பேர் மீது வழக்கு' - சிபிஐ தகவல்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

'Case against 21 in connection with Gutka scam' - CBI information

 

குட்கா முறைகேடு தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை முன்னாள் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி முன்பு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடந்த விசாரணையில் 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக மூடிய உறையுடன் கூடிய கடிதத்தை சிபிஐ தரப்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

 

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை 21 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது. தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 பேருக்கு எதிராக விசாரணைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு பேருக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை'  என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

 

தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 'சிபிஐ தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முழுவதும் நிறைவடையாததால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த அந்த மனுவுக்கு சிபிஐ தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்