புளியந்தோப்பு பகுதியில் உள்ள இளைஞர்கள் அதிகம் பேர் கஞ்சா போதைக்கு அடிமையாகும் அளவிற்கு கஞ்சா புழக்கம் இருந்து வந்ததாக குற்றச்சாட்டு எழ இதுகுறித்து புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுவரப்பட்டது.
கஞ்சாவானது கல்வி நிலையங்களுக்கு அருகில் விற்பனை ஆவதும் இதை செய்வது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாருக்கு கிடைத்த முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஜோதி என்ற பெண்ணை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த கஞ்சா எப்படி கிடைத்து என ஜோதியிடம் நடத்திய விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ண குமாரை கைகாட்ட அவனிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காசிமேட்டை சேர்ந்த பாலமுருகன் மற்றும் இளங்கோவன் ஆகியோரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் பிடிபட்ட அனைவரும் சில்லறை வியாபாரிகள் என தெரியவந்த நிலையில் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் மீஞ்சூரை சேர்ந்த சுரேஷ்குமார் வீட்டில் போலீசார் நடத்திய ஆய்வில் வீட்டில் தலையணைக்குள் கஞ்சா அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுரேஷ்குமாரும் அவரது மனைவியும் கஞ்சாவை கடத்திவந்து வடசென்னைக்கே விநியோகித்து வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அந்த தம்பதிகள் ரயில் மூலம் விசாகப்பட்டினம் சென்று அங்குள்ள ஒரு கிராமத்தில் கஞ்சாவை விலைக்கு வாங்கிக்கொண்டு சென்னை வந்து வியாபாரம் செய்துள்ளனர். போகும் போது கையில் கொண்டு செல்லும் போர்வையை கத்தரித்து தலையணைய செய்து வரும்போது பஞ்சுக்கு பதிலாக கஞ்சாவை நிரப்பி இங்கு கொண்டுவருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கையில் தலையணை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருள்களுடன் வருவதால் அக்கம் பக்கத்தினருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. மேலும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து கஞ்சா விற்பனை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கஞ்சா விற்பனையில் முக்கிய நபர்கள் சிலரை தேடிவரும் போலீசார் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சசிகுமார் என்பவனையும் தேடி வருகின்றனர்.