Skip to main content

கால்வாய் உடைப்பு சீரமைப்பு பணி... அமைச்சர் ஆய்வு!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

ஆண்டிபட்டி அருகே 58 கால்வாய் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளை வருவாய்த்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்வதாலும், பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 68 அடி உயர்ந்தது. இந்நிலையில் 58 ஆம்  கிராம பாசன கால்வாயை திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

 Canal breakage renovation work minister inspection theni district

இதனையடுத்து தமிழகஅரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 5- ஆம் தேதி அதிகாலை 05.00 மணியளவில் பெரியாறு- வைகை கோட்ட பொறியாளர் சுப்பிரமணி 58- ஆம் கால்வாயில் சோதனை ஓட்டத்திற்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து வைத்தார். தண்ணீர் கால்வாயில் ஆர்ப்பரித்து சென்றதை கண்ட மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி கால்வாயை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கால்வாய் நீரை வரவேற்றனர்.
 

ஆனால் ஆண்டிபட்டிக்கு கிழக்கே டி.புதூர் கிரமத்தை ஒட்டியுள்ள இடத்தில் கால்வாயின் கரை வலுவிழந்து வியாழக்கிழமை அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் உடைப்பை சரி செய்வதற்காக கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கால்வாயில் தண்ணீர் வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தண்ணீர் வராததால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

 Canal breakage renovation work minister inspection theni district

இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட கால்வாய் பகுதியில் 100- க்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து இரவு பகலாக, உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய்த்துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், 58 கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை மாவட்ட கலெக்டர் வினய், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் அன்புச் செழியன், சுந்தரப்பன் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித் துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.






 

சார்ந்த செய்திகள்