சென்னையில் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடைய 9 மாணவர்களை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமான பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
சென்னையில் ''பஸ் டே'' எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக கூறி ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசு பேருந்தில் மேற்கூரையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னே பைக்கில் சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து ஓட்டுனரும் சடாரென பிரேக் போட்டார் இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடாரென கீழே விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைத்து மாணவர்களும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பேருந்து தினம் கொண்டாடியது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் 9 மாணவர்களையும் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.