Skip to main content

மனைவியை சேர்த்து வைக்கச் சொன்ன கணவரை அடித்தே கொன்ற மைத்துனர்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

brother-in-law who beat husband who asked him keep his wife together
கோப்புக்காட்சி

 

சங்ககிரி அருகே, பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கும்படி கூறியதால் ஆத்திரம் அடைந்த மனைவியின் அண்ணன், தனியார் மில் ஊழியரை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால்(44). குமாரபாளையத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மேற்பார்வையாளராக வேலை செய்துவந்தார். இவருடைய மனைவி சரிதா (38). இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சரிதா சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். 

 

இந்நிலையில், நவ.20 ஆம் தேதி இரவு, அதே ஊரைச் சேர்ந்த கோயில் பூசாரி பழனியப்பன் என்பவரைச் சந்தித்த தனபால், பிரிந்து சென்ற தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக பழனியப்பன் சரிதாவின் அண்ணன் சரவணனிடம் சமாதானமாகப் போகும்படி பேசியுள்ளார். 

 

தன் தங்கையைப் பற்றி ஊர் முழுக்க தனபால் பேசி வருவதாக கருதிய சரவணன் (44), அவருடைய தாய் ராஜம்மாள் (60) ஆகியோர் உறவினர்கள் சிலருடன் சென்று தனபாலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சரவணன், தங்கையின் கணவர் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தனபால் மயக்கம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே தனபால் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி, சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனபாலின் மனைவி, அவருடைய மாமியார், மனைவியின் அண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்