சேலத்தில், நிதி நிறுவனம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு பல கோடி ரூபாய் சுருட்டிய பா.ஜ.க. பிரமுகர் மீது மேலும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சேலம் அழகாபுரம் ரெட்டியூரைச் சேர்ந்தவர் ஏ.பி.பாலசுப்ரமணியம். இவர், புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார்.
இவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வினோத், மருமகன் கதிர்வேல் ஆகியோரும் நிர்வாகம் செய்து வந்தனர். சேலத்தைத் தலைமை இடமாகக் கொண்டு திருவண்ணாமலை, காரைக்குடி, தலைவாசல், ஈரோடு, சென்னை, நீலகிரி ஆகிய இடங்களிலும் கிளைகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 12 மாதங்கள் கழித்து 1.60 லட்சம் ரூபாயாக திருப்பித் தரப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பிய பலர், பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இதற்காக முகவர்களை நியமித்து, அவர்கள் மூலமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடாகப் பெறப்பட்டது.
ஆரம்பத்தில் சிலருக்கு உறுதி அளித்தபடி முதலீட்டுத் தொகையை கூடுதல் லாபத்துடன் கொடுத்து வந்த இந்நிறுவனம், அதன்பின் முதலீட்டுத் தொகையைக் கூட திருப்பித்தராமல் போக்கு காட்டி வந்தது. ஏமாற்றம் அடைந்த பலர் சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியைச் சேர்ந்த காவேரியப்பன் என்பவர் அளித்த புகாரின்பேரில், பாலசுப்ரமணியம், மனைவி தனலட்சுமி, மகன் வினோத், மருமகன் கதிர்வேல் ஆகியோர் 37 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக அழகாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆக. 19- ஆம் தேதி, சென்னையில் வைத்து பாலசுப்ரமணியம், அவருடைய மனைவி தனலட்சுமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். வினோத், கதிர்வேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இவர்கள் மீது மேலும் இரண்டு புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.