Skip to main content

மணல் கடத்தலில் சிக்கிய பாஜக பிரமுகர்- நாகை பரபரப்பு

Published on 26/10/2018 | Edited on 27/10/2018
ro

 

சீர்காழி பகுதியில் சட்டவிரோதமாக மணல்குவாரி நடத்திவந்த, பி.ஜே.பி பிரமுகர் அகோரம் உள்ளிட்ட அவரது உறவினர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்ததோடு பல கோடி ரூபாய்  மதிப்புள்ள மணல் குவாரிக்கும் சீல் வைத்திருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை  உண்டாக்கியுள்ளது. 

 

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்கு திருவெண்காடு ராதாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அகோரம். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து பா,ம,கவில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர் அகோரம். மயிலாடுதுறை பாராளுமன்றத்தேர்தலிலும், அதற்கு முன் பூம்புகார் சட்டமன்றத்தேர்தலிலும் பா.ம.க வேட்பாளராக போட்டியிட்டு மூன்று மாவட்டத்திலும் பரிச்சையமானவர். இவர் பா.ம.க பிரமுகரான மூர்த்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்டதாக பா.ம.க-விலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு விவசாய சங்கம் ஒன்றை அமைத்து தனது பலத்தை பா.ம.கவிற்கும் நாகை மாவட்டத்திற்கும் காட்டினார்.  அதன்பிறகு கடந்த ஆண்டு, பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார்.  உடனடியாக அக்கட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இணைச்செயலாளர் பதவியும் அவருக்கு தரப்பட்டது.  

 

  இந்தநிலையில் நாகை மாவட்டம் முழுவதிலும் ஆளாலுக்கு அனுமதியின்றி அதிகாரிகளின் உதவியோடு மணல்குவாரி நடத்தி கோடி,கோடியாக குவித்து வருவதைக்கண்டு அகோரமும் அந்த தொழிலை செய்யத்துவங்கினார். சம்பாகட்டளை என்கிற கிராமத்தில் நவக்கிரகஸ்தலங்களில் புதன் ஸதலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கச் சொந்தமான இடத்தை, அகோரம் தனது மாமனார் பெயரில் குத்தகைக்கு எடுத்து.  அந்த இடத்தில் ஆறுகளிலும், குளங்களிலிருந்து சட்டவிரோதமாக மணலைக்கொண்டுவந்து மலைபோலகுவித்து, மணல் குவாரியாகவே நடத்திவந்திருக்கிறார். நாகை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த  அரசுமணல் குவாரிகள்  மூடப்பட்டதையும், தமிழகமெங்கும் மணல் தட்டுப்பாடு நிலவியதை சாதகமாக்கிக்கொண்டு அதிரடியாக மணல் கடத்தல் விற்பனையை நிகழ்த்தியுள்ளார்.   

 

 அனுமதியில்லாம அகோரம் மணல் குவாரி நடத்துவது குறித்து நாகை மாவட்ட எஸ்.பி விஜயக்குமாருக்கு தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன்  தகவல்கிடைத்தது,  அதன் அடிப்படையில் நேரடியாகவே ஆய்வில் இறங்கினார். டி,எஸ்,பி சாமிநாதன் தலையிலான காக்கிகள் டீமையும் அனுப்பினார். மணல் குவாரி, மணல் குவித்துவைத்துள்ள இடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ஆறுபேரை கைது செய்துள்ளனர்.    

 

 திடீர் ரைடு எதற்கு என்று காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், “ புதிய எஸ்,பி வந்ததும், ஒவ்வொரு ஏரியாவாக மணல்திருட்டுக்கு முற்றுப்புள்ளிவைத்துவருகிறார்.அந்த வகையில் சட்டவிரோதமாக அகோரம் மணல்குவாரி நடத்தி வருவது எல்லோருக்குமே தெரிந்ததுதான். அதற்கான சந்தர்ப்பமும், ஆதாரமும் கிடைக்கும் வரை காத்திருக்கலாம்னு இருந்தார். தற்போது புகாருடன், அரசியல் மேல்மட்ட பிரஷரும் இருந்ததால், சம்மந்தபட்ட அகோரம் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தோம். அகோரத்தின் தம்பி ரவி, மனைவி புனிதவள்ளி, மைத்துனர் மூர்த்தி, சித்தப்பா மகன் ரமேஷ் உள்ளிட்ட 7 பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். 
 மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் ஒன்று. லாரிகள் 3 ஆகியவைகளை கைப்பற்றப்பட்டுள்ளன.  குவித்துவகிக்கப்ப்ட்டிருக்கும் சுமார் 1800 யூனிட் மணலுக்கு சீல் வைத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு இடங்களில் குவித்துவைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதையும் விரைவில் முடக்குவோம், தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் மணலின் மதிப்பு சுமார் 2 கோடிக்கும் அதிகம்.’’ என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்