Skip to main content

"தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை ரத்து" - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Published on 03/08/2021 | Edited on 03/08/2021
"The government, which allows jallikkattu, has banned only online games" - argued lawyers

 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. 

 

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்குத் தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாதிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும்,  இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர். மேலும், சட்டத்தை இயற்ற முறையாக எந்தவொரு காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

 

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர்,  இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளதாகவும், பொது நலனைக் கருத்தில் கொண்டு  இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும், இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தை ரத்து செய்தனர். மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்