Skip to main content

ஹோட்டலில் நடக்கும் சட்ட விரோத செயல்கள்; கண்டுகொள்ளாத உதவி ஆணையர்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Assistant Commissioner in Trichy who did not detect illegal activities

 

திருச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகில் ஹோட்டல்  அன்பு பார்க் செயல்பட்டு வருகிறது. ஹோட்டலின் 4வது மாடியில் பஃப் மற்றும் ஸ்பா அனுமதியின்றி செயல்பட்டு வந்தது. இங்கு இளம் வயதுடைய ஆண்கள், பெண்கள் ஏராளமானோர் வந்து மது அருந்துவர். அப்பொழுது மது போதையில் அடிக்கடி தகராறு நடப்பதால் காவல்துறைக்கு புகார்  சென்றது.     

 

இதனை தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் அங்கு சென்று அதிரடி  சோதனை நடத்தி எந்த உரிமமும் பெறாமல் செயல்பட்டு வந்த அந்த பப்பிற்கு சில மாதமும் முன்பு சீல் வைத்தார்.  தற்பொழுது மாநகரில் உள்ள ஸ்பா மற்றும் பப்புகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக முறைகேடாகவும் உரிமம் இல்லாமல் செயல்படும் ஸ்பா மற்றும் பப்புகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.      

 

இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சீல் வைக்கப்பட்டிருந்த அன்பு பார்க் ஹோட்டலில் உள்ள பஃப் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது.  தகவலறிந்த துணை  ஆணையர் செல்வகுமார் அன்பு பார்க் ஓட்டலில்  உள்ள பப்பிற்கு சாதாரண உடையில் சென்று பார்த்த போது அதிர்ச்சி  அடைந்தார். அங்கே இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்கள் மதுபானம் அருந்தி நடனமாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.    

 

ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பஃப்  மீண்டும் எப்போது திறக்கப்பட்டது  என்பது குறித்து அங்குள்ள ஊழியிடம் கேட்டறிந்த துணை  ஆணையர், ஹோட்டலுக்கு வெளியே  நின்று கொண்டிருந்த மற்ற காவலர்களை அழைத்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோரை அதிரடியாக  கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு பிடித்துச் சென்றார்.  இதனால் இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் காவல் நிலையத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் அரசு அதிகாரிகளும், சில முக்கிய பிரமுகர்களும் சிக்கி கொண்டனர்.      

 

இதில் மது போதையில் இருந்த இளம் பெண்களை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த காவல் அதிகாரிகள், அவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர். இந்த அன்பு ஸ்பா மற்றும் கிளப்பில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சட்ட விரோதமாக திறக்கப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இப்பகுதியில் உதவி ஆணையராக இருக்கும் கென்னடி எந்தவித சட்டவிரோதமான செயல்களையும் கண்டுகொள்ளாமல், கட்டப்பஞ்சாயத்து செய்வதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. துணை ஆணையர் நடத்திய சோதனையில் கூட அவர் தகவல் அறிந்து மெதுவாக தான் வந்திருக்கிறார்.   

 

இது போன்ற சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுக்க வேண்டிய உதவி ஆணையர் அதைப்பற்றி கவலைப்படாமல் பணம் வசூல் செய்வதிலும் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும், இது போன்ற அதிகாரிகளால் மாநகரில் தொடர்ந்து சட்ட விரோதமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. எனவே உயர் அதிகாரிகள் காவல்துறையில் உள்ள இது போன்ற கருப்பு ஆடுகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், சட்ட விரோத செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் காமினி கேட்டபோது, “இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்