Skip to main content

ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்.. ஏன் தாமதம்? - ஹைகோர்டில் பதில்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Arumugasami Commission of Inquiry; 90 percent investigation completed .. High Court information ..!

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், 90 சதவீத விசாரணையை முடிந்துவிட்டதாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அதுசம்பந்தமாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருவதாகவும், இதுநாள்வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 11வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

விசாரணை ஆணையத்தின் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 90 சதவீத விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆணைய விசாரணைக்கு தடை விதித்துள்ளதால், 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இதையடுத்து, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்