Skip to main content

பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா; அண்ணனுக்கு உதவிய தங்கை

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

 arrested brother who had hidden camera and younger sister who was an accomplice

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் பிரபல துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று நடுத்தர வயது பெண்மணி ஒருவர் தனக்கான உடைகள் வாங்குவதற்குச் சென்றுள்ளார். உடைகளை வாங்கிய அந்த பெண் சரியா இருக்கிறதா என்று போட்டுப் பார்ப்பதற்காக அந்த கடையிலுள்ள துணி மாற்றும் அறைக்குச் சென்றுள்ளார். 

 

அப்போது அந்த அறையின் மேல் பகுதியில் கண்ணாடி போன்று ஒன்று இருந்ததைப் பார்த்து சந்தேகம் அடைந்தார். உடனே தனது கையால் அதை தட்டிப் பார்க்கும் போது அதில் இருந்து ஒரு செல்போன் கீழே விழுந்தது. உடனடியாக அந்த கடையில் வேலை செய்த ஒரு பெண் ஓடிச் சென்று செல்போனை எடுத்துக் கொண்டார். இதனை கவனித்த உடை மாற்ற வந்த பெண் அதிர்ச்சியடைந்து நடந்த சம்பவத்தை மற்ற வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார் கடைக்குள் சென்று விசாரணை செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கடையில் மேலாளர் ஏழுமலை விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தக் கடையில் வேலை செய்த அரகண்டநல்லூர் அடுத்த நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25), அவரது 22 வயது தங்கை ஆகிய இருவரும் பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த செல்போனை ஓடிச் சென்று எடுத்த அந்த பெண் அதில் இருந்த மெமரி கார்டை தென்பெண்ணை ஆற்றில் வீசி விட்டு செல்போனை கடை மேலாளர் ஏழுமலையிடம் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

 

இதையடுத்து, ஆற்றில் வீசிய மெமரி கார்டையும் கண்டெடுத்த திருக்கோவிலூர் போலீசார், அதன் மூலம் தவறான நோக்கத்துடன் மொபைல் போனை மறைத்து வைத்திருந்த விக்னேஷ், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தங்கை ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த கடை மேலாளர் ஏழுமலையிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்