Skip to main content

நந்தனார் பள்ளியில் அரசு தேர்வுகளில் முதன்மை இடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Appreciation for students who topped government exams at Nandanar School

 

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசளிப்பு மற்றும் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ‘சுவாமி ஏ.எஸ். சகஜானந்தா பணி நிறைவு பெற்றோர் சமூக அறக்கட்டளை’ சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சமூக அறக்கட்டளையின் ஆலோசகர் சக்கரபாணி மற்றும் தலைவர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.

 

இதில் முதன்மை விருந்தினராகச் சிதம்பரம் காவல்துறை ஏ.எஸ்.பி ரகுபதி மற்றும் சிறப்பு விருந்தினராகச் சிதம்பரம் ஸ்ரீ சண்முக விலாஸ் குழுமத்தின் உரிமையாளர் பொறியாளர் கணேசன் கலந்து கொண்டு, சிதம்பரம் சுற்று வட்டப் பகுதியில் உள்ள ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்று அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குச் சான்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய சிதம்பரம் ஏ.ஸ்.பி ரகுபதி, மாணவ மாணவிகள் வாழ்வியல் சூழலை அறிந்து கல்வி கற்று அரசின் உயர் பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் மாணவர்கள் பெற்றோர்கள் படும் துயரங்களை எண்ணி கல்வி கற்க வேண்டும் என்றார். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளது. அதனைச் சரியான நேரத்தில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு எழுச்சியுரையாற்றினார். அதேபோல் சிறப்பு விருந்தினர் பொறியாளர் கணேசன், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்வியால் ஒருவர் எவ்வாறு உயர்ந்த இடத்திற்கு செல்வார் என்பது குறித்து மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் மற்றும் கல்வி கற்கும் செலவுகளைச் சொந்த செலவில் வழங்குவதாக உறுதியளித்தார்.  இதனை அனைவரும் வரவேற்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமலதா, அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மலைராஜ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சிவகாந்தி, சுவாமி சகஜானந்தா சமூக அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பாலையா, இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர் விமலக்குமார், துணைச் செயலாளர் காந்திமதி, துணைப் பொருளாளர் நெடுஞ்செழியன், பள்ளியின் விடுதி காப்பாளர் பழனி, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் இதேபோல் மற்ற அனைத்து மாணவர்களும் முதன்மை மதிப்பெண் பெற வேண்டும் எனப் பேசினார்கள். அறக்கட்டளையின் தணிக்கையாளர் விஜயகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்