நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முறைகேடுகளின்றி நடத்த மாவட்டந்தோறும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் சேலம், ஓசூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 66 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கு பிப். 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, கடந்த ஜன. 28ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் நடந்து வருகிறது. மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதற்கிடையே, தமிழக தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு அண்ணாத்துரை, நாமக்கல் மாவட்டத்திற்கு இன்னசென்ட் திவ்யா, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தனா கார்க், தர்மபுரி மாவட்டத்திற்கு பிருந்தா தேவி ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று முதல் பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் பணிகளைத் தொடங்குகின்றனர்.