நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சி என மொத்தம் 38 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள், 6 நகராட்சிகளில் 165 வார்டுகள், பேரூராட்சிகளில் 474 வார்டுகள் என மொத்தம் 699 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாநகராட்சியில் வாக்களிக்க 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 லட்சத்து 19361 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 6 நாகராட்சிகளில் மொத்தம் 273 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 25778 வாக்காளர்களும் உள்ளனர். அதேபோல், 31 பேரூராட்சிகளில் 537 வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 90894 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 33 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். இதற்காக மொத்தம் 1519 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பிப். 22ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி:
சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பதிவாக உள்ள வாக்குகள் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகின்றன.
நகராட்சிகளுக்கு:
ஆத்தூர் நகராட்சிக்கு வடசென்னிமலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மையத்திலும், நரசிங்கபுரம் நகராட்சிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திலும், மேட்டூர் நகராட்சிக்கு மேட்டூர் எம்ஏஎம் மேல்நிலைப்பள்ளியிலும், இடைப்பாடி நகராட்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இடங்கணசாலை நகராட்சிக்கு இளம்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திலும், தாரமங்கலம் நகராட்சிக்கு செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பேரூராட்சிகளுக்கு:
அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகளுக்கு அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், இளம்பிள்ளை, மல்லூர், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிகளுக்கு இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்; கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் பேரூராட்சிகளுக்கு கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, பூலாம்பட்டி பேரூராட்சிகளுக்கு ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காடையாம்பட்டி, ஓமலூர், கருப்பூர், மேச்சேரி பேரூராட்சிகளுக்கு ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி பேரூராட்சிகளுக்கு தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வீரக்கல்புதூர், பி.என்.பட்டி, கொளத்தூர் பேரூராட்சிகளுக்கு மேட்டூர் டேம் வைத்தீஸ்வரன் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி, கொங்கணாபுரம், தேவூர், அரசிராமணி பேரூராட்சிகளுக்கு சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்; பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகளுக்கு பெத்தநாயக்கன்பாளையம் அரசு பெண்கள் நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.