Skip to main content

“கர்நாடக அரசுக்கு தமிழக அரசின் ஒப்புதல் இன்றி அனுமதி வழங்கக்கூடாது”- அன்புமணி

Published on 23/08/2024 | Edited on 23/08/2024
Anbumani says should not give permission to  Karnataka govt without consent of the Tamil Nadu govt

மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் மீண்டும் மனு அளித்துள்ளது; தமிழகத்தின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு  சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பித்திருக்கிறது. மேகதாது அணைக்கு  சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு  ஜூன் மாதம் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீது  இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படாத நிலையில், மீண்டும் அனுமதி கோரி கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.மேகதாது அணை அமையவுள்ள இடம், அணையின் பரப்பு, நீர்த்தேக்கப்படவுள்ள பரப்பு,  அதனால் பாதிக்கப்படும் வனப்பரப்பு உள்ளிட்ட விவரங்களை மனுவில் தெரிவித்திருக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசே முடிவெடுக்கலாம் என்றும்,  இதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.  மேகதாது அணை கட்டப்பட்டால் பாதிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு தான் எனும் போது தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.

காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை சுட்டிக்காட்டி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாவிட்டால், மேகதாது அணைக்கான கர்நாடகத்தின் விண்ணப்பத்தை ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று 2015-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, எனக்கு எழுதிய கடிதத்தில் உறுதி அளித்திருக்கிறார். ஆனால், இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டு, மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட  அனுமதி கோருவது நியாயமல்ல.

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு  அனுமதி  அளித்ததன் அடிப்படையில் தான் அணை கட்டுவதற்கான  நடவடிக்கைகளை  கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதி தவறு; அதை ரத்து செய்ய வேண்டும்  என்று கூறித்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இத்தகைய நிலையில் கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பம் செய்திருப்பது  சட்டவிரோதமானது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாவதை தவிர்க்க முடியாது. காவிரியின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என்று நடுவர் மன்றமும்,  மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றமும்  தீர்ப்பளித்துள்ள நிலையில், மேகதாது அணைக்கு சுற்றுச்ச்சூழல் அனுமதி கோரும் கர்நாடகத்தின் மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.  அதுமட்டுமின்றி, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க  2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிபிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்