திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஒரு மாதக் காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையைத் துவங்கியுள்ளார்.
தற்பொழுது இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 326-ல் பல்வீர் சிங் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆயுதத்தை பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பைச் சேர்ந்த 14 பேரிடம் விசாரணை நடைபெற்றது. இன்று மாலை 4:30 மணிக்கு விசாரணை முடிந்த நிலையில் அமுதா ஐஏஎஸ் பாதிக்கப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டர். அக்காவல்நிலையத்தில் ஒவ்வொரு அறையாகச் சென்று ஆய்வில் ஈடுபட்ட அவர், சிசிடிவி அமைக்கப்பட்டுள்ள அறையிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனும் உடன் இருந்தார். இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட மற்ற காவல் நிலையங்களான கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களிலும் அவர் ஆய்வு மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.