Skip to main content

“அனைத்து அரசு சான்றிதழ்களையும் இலவசமாக பெறலாம்” - அமைச்சர் சக்கரபாணி பேச்சு

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

 All Govt Certificates Free - Minister Chakrapani Speech

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், அண்ணாநகரில் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையத்தை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

 

அதன்பின் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ''பொதுமக்கள் அனைத்து சான்றிதழ்களையும் துரிதமாக பெறுவதற்காக முதல்வர் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததன் பேரில் தற்போது இந்த இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையம் மூலம் ஆதார் பெயர் சேர்த்தல் திருத்தம், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் கார்டு பதிவு, பெயர் நீக்கல், சேர்த்தல், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ் உள்ளிட்ட அரசு சார்ந்த வருவாய்த்துறை சான்றிதழ்களை இலவசமாக இம்மையத்தில் விண்ணப்பித்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

 

மேலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி, தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த இ-சேவை மையம் தொடங்கப்படும். இதன் மூலம் பொதுமக்களின் பயணச் செலவு, பணச் செலவு குறையும், அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலேயே இந்த சேவை மையம் தொடங்கப்படும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் தற்பொழுது துவக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டம் 14 மாதத்தில் முடிவடையும். இதன் மூலம் நகர் பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீரும், ஊரக பகுதிகளில் ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீரும் வழங்கப்படும். இதற்காக ஏ.பி.பி.நகர், காந்திநகர், கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேல்நிலை தொட்டி கட்டப்படவுள்ளது.

 

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான பரப்பலாறு தூர்வாரப்படுவதற்கு அனுமதி பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் 10 நாட்களில் பரப்பலாறு அணை தூர்வாரப்படும். லெக்கையன் கோட்டையிலிருந்து அரசப்பபிள்ளைபட்டி வரை மின் விளக்குகள் அமைக்கும் பணி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. நபார்டு வங்கி நிதி உதவியுடன் 7 பாலங்கள் கட்டப்பட உள்ளன. ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர்மலையைச் சுற்றி ரூ.15 கோடியில் கிரிவலப் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. விரைவில் நகராட்சி பகுதியில் 32 கோடியில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்படவுள்ளது.

 

வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் தரம் உயர்த்தி, புதுப்பிக்கப்படும். மேலும் இன்று தொடங்கப்பட்டுள்ள இ-சேவை மையத்திலேயே பொதுமக்கள் குறைதீர் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மையத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதி சார்ந்த குறைகளை 9488077777 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு  நிவர்த்தி செய்து கொள்ளலாம்” என்று கூறினார் .

 

 

சார்ந்த செய்திகள்