தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நவீனத் தொழில்நுட்பங்கள், புதிய ரக வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வினை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் வகையில், பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படும் என 2023 - 24 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் வணிகத் திருவிழா சென்னையில் கடந்த 8 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு பெருவாரியான சென்னை வாழ் மக்களும், வேளாண் பெருமக்களும் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று முதல் ஜூலை 29 வரை மூன்று நாட்கள் ‘வேளாண் சங்கமம் - 2023’ என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை 10 மணியளவில் வேளாண் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்க உள்ளார். இந்தக் கண்காட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், மரக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.