நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, ஐந்து பேருக்கு 500 ரூபாய் என்ற ரீதியில் பணம் விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது பாஜக கொடியை ஏந்திச் செல்லும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் என ஐந்து பேருக்கு மொத்தமாக 500 ரூபாய் கொடுக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளை பாஜகவினர் கொடுக்கும் அந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.