சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இறுதி ஆட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பகுதி நேர ஆட்ட முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னிலை வகித்த இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் நான்காவது முறையாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
30 நிமிடங்கள் வரை 3-1 என பின்தங்கிய இந்தியா, இறுதி பதினைந்து நிமிடங்களில் மூன்று கோல் அடித்தது. 9, 45, 45, 56 ஆகிய நிமிடங்களில் இந்திய வீரர்கள் கோல் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர். இந்திய அணியின் மன்பிரீத் சிங், ஜிக்ராஜ் சிங், ஆகாஷ் தீப் சிங் உள்ளிட்டோர் கோல் அடித்து அசத்தினர். அதிக கோல் அடித்தவராக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இடம் பெற்றார்.
இந்நிலையில் பரிசளிப்பு விழாவில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோப்பையை வழங்கி, வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து, வாழ்த்தினார். மேலும், வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்ச ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 1 கோடியே 10 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.