Skip to main content

3 கோடி ரூபாய் நகைகளை மீட்டாச்சு! கொள்ளையர்களை தப்பவிட்ட காவல்துறை!!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

மத்தியபிரதேச கொள்ளை கும்பலிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்த சேலம் மாவட்ட காவல்துறையினர், அவர்களை கூண்டோடு பிடிக்கும் முயற்சியில் சறுக்கினர்.

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் கிளை, கோவையில் இயங்கி வருகிறது. இந்தக் கடைக்குத் தேவையான தங்கம், வைர நகைகளை ஹைதராபாத்தில் உள்ள கடை ஊழியர்கள் அவ்வப்போது கோவைக்கு ஆம்னி பேருந்தில் எடுத்துச் சென்று கொடுத்து வருவது நடைமுறையில் வைத்திருக்கின்றனர்.

இந்தக் கடையின் ஊழியரான கவுதம் (25), கடந்த பிப்.8ம் தேதி இரவு 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை எடுத்துக்கொண்டு, தனியார் ஆம்னி பேருந்தில் கோவைக்கு புறப்பட்டார். அந்தப் பேருந்து மறுநாள் காலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில், ஓர் உணவகம் அருகே நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட அந்த உணவகத்தில், பயணிகள் சாப்பிடுவதற்காக அந்த ஆம்னி பேருந்து நின்று செல்வது வழக்கம்.

 

3 crore jewelry Police ;escaping the robbers

 

பின்னர் சிறிது நேரம் கழித்து ஆம்னி பேருந்து புறப்பட்டது. பயணிகள் எல்லோரும் ஏறி அமர்ந்தனர். கவுதம், தான் கொண்டு வந்திருந்த நகைப்பை சரியாக இருக்கிறதா என பார்த்தபோது, அந்தப்பை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆம்னி பேருந்தின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, உணவகத்தில் அந்தப் பேருந்து நின்றிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் பேருந்தில் ஏறி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொண்ட பையை திருடிச் செல்வது தெரிய வந்தது.

இந்த துணிகர கொள்ளை குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர். சங்ககிரி டிஎஸ்பி தங்கவேல், காவல் ஆய்வாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பேருந்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, உணவகத்தில் பேருந்து நின்ற சமயத்தில்தான் மர்ம நபர் ஒருவர் ஆம்னி பேருந்தில் ஏறி, நகைப்பையை தூக்கிச் செல்வது தெரிய வந்தது.

ஆம்னி பேருந்தை தொடர்ந்து வந்த வாகனங்கள் குறித்து, சுங்கச்சாவடிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. மத்திய பிரதேச மாநில பதிவெண் கொண்ட ஒரு கார் ஆம்னி பேருந்தை நீண்ட தூரத்திற்கு பின்தொடர்ந்து வருவது தெரிய வந்தது. அந்த காரில் வந்த கும்பல்தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மத்தியபிரதேச மாநிலத்திற்கு விரைந்தனர். அங்குள்ள தார் மாவட்டம் மன்னாவர் அருகே உள்ள முல்தானிகேர்வா பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, அக்தர், முனீர், அகமதுகான், அஜர் ரத்தோர் ஆகிய 5 பேர் கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

 

3 crore jewelry Police ;escaping the robbers

 

கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைர நகைகளை வியாபாரிபோல் பேரம் பேசி அவர்களை கூண்டோடு மடக்கிப் பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, வைர வியாபாரிகள் போல நாடகமாடிய காவல்துறையினர் கொள்ளையர்களிடம் நகைகளை வாங்க விரும்புவதாகக்கூறி அவர்களை பரம்புரி மாவட்டம் காளிப்பாவடி என்ற இடத்திற்கு வருமாறு அழைத்தனர்.

அங்கு வந்த கொள்ளையர்களிடம் நகைகளை பார்வையிட வேண்டும் என்று கூறி, நகைகளை வாங்கிப் பார்த்தனர். அவை சங்ககிரி அருகே கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள்தான் என்பதை உறுதி செய்து கொண்டனர். அதையடுத்து அந்த கும்பலை மடக்கிப்பிடிக்க முயன்றபோது, சுதாரித்துக்கொண்ட அவர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டுவிட்டு காரில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர்.

அந்த கும்பலிடம் இருந்து 592 கிராம் எடையுள்ள 7 நெக்லஸ், வைரம் மற்றும் கற்கள் பதித்த 287 கிராம் எடையுள்ள 14 செட் கம்மல், கற்கள் பதித்த 11 கிராம் எடையுள்ள மோதிரங்கள் என மொத்தம் 3 கோடி ரூபாய் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறை தனிப்படையினர், கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்