Skip to main content

பேக்கரியில் முட்டை பப்ஸ், கேக் சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி 

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

3 admitted to hospital after eating egg pops, cake at bakery
கோப்புபடம்

 

ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தாமரைச்செல்வி(30). இவர்களது குழந்தை தக்‌ஷினி(4). உறவினர் சிவகாமி(30). நேற்று மதியம் தாமரைச்செல்வி தனது மகள் மற்றும் உறவினர் சிவகாமி உடன் ஈரோடு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் முட்டை பப்ஸ் மற்றும் கேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர். 

 

வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே தாமரைச்செல்வி, சிவகாமி, தக்‌ஷினி ஆகிய 3 பேருக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்நிலையில், ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவின் பேரில், அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இன்று காலை சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக்கொண்டதோடு மறு அனுமதி வரும் வரை வேறு எந்த உணவுப் பொருட்களையும் தயாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் நடந்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். பேக்கரியில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.