
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது.
கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது.
இந்த 2023ஆம் ஆண்டு இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4,534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 255,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளசாராயம் கடத்த, பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டர் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.