Skip to main content

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பரிசு அறிவித்த முதல்வர்!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

2 crore prize for silver winner Mariappan! -Chief Minister's announcement!

 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24-ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள். இந்தநிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.

 

கடந்த பாரா ஒலிம்பிக்சில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோட்டியில் இந்திய வீரர் சரத் குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டம் வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் 'மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

2 crore prize for silver winner Mariappan! -Chief Minister's announcement!

 

அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாரியப்பனுக்கு தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார். அதில், 'பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றுள்ள தமிழக நட்சத்திரம் மாரியப்பனுக்கு வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் தொடர் வெற்றியை காணும்போது மகிழ்ச்சியளிக்கிறது' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

 

இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாயை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த செய்தி குறிப்பில், பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. எளிமையான வாழ்வையும் சவாலான உடல் நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார். இளைஞர்களிடம் ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விருதுகளை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்